Sunday, 11 May 2014

கை, கால் செயல் இழந்த கன்னியாகுமரி பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி தீவிர உயர் சிகிச்சை அளிக்கவும் ஜெயலலிதா உத்தரவு

கை, கால் செயல் இழந்த கன்னியாகுமரி பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி தீவிர உயர் சிகிச்சை அளிக்கவும் ஜெயலலிதா உத்தரவு 

சென்னை,
கை, கால் செயல் இழந்து சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை பெண்ணுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கவும், தீவிர உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

இதுகுறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தைராய்டு நோய் பாதித்த பெண்

கன்னியாகுமரி மாவட்டம், மடத்துவிளை, கன்னக்கோடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மனைவி சீதாலட்சுமி என்பவர் தைராய்டு நோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு கடந்த மார்ச் மாதம் 2–ந்தேதி அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் பின் விளைவுகள் காரணமாக அம்மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், தொடர் சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தொடர்ந்து தீவிர மருத்துவக்கண்காணிப்பு பிரிவில் சீதாலட்சுமி சிகிச்சை பெற்று வந்தார்.

இவரது உடல்நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினாலும், இவரது கை, கால்கள் செயலிழந்த நிலையில் இருந்ததாலும், மேல்சிகிச்சைக்காக சென்னை, அரசு பொதுமருத்துவமனையில் கடந்த 1–ந்தேதி அன்று தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இவருக்கு தற்போது திரவ உணவு குழாய் வழியாகவும், டிரிப் வாயிலாகவும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இயன்முறைப்பயிற்சி (பிசியோதெரபி) வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.5 லட்சம் நிவாரணம்

இவரது உடல்நிலை பற்றிய விவரங்கள் எனது கவனத்திற்குத் தெரியவந்தவுடன், இவருக்கு தீவிர உயர்சிகிச்சை அளிக்குமாறு சென்னை அரசு பொதுமருத்துவமனை நிர்வாகத்திற்கு நான் உத்திரவிட்டேன். அதன் அடிப்படையில், மருத்துவர் டிட்டோ தலைமையில் நரம்பியல், இரத்தநாளம், மருத்துவம், மயக்கவியல் போன்ற பல்வேறு உயர்சிகிச்சை வல்லுநர்களைக்கொண்ட ஒரு சிறப்பு மருத்துவக்குழு அமைக்கப்பட்டு இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவரது ஏழ்மையான குடும்ப சூழ்நிலையைக்கருத்தில் கொண்டு சிறப்பினமாக இவரது குடும்பத்திற்கு முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நன்றி : தினத்தந்தி

0 comments:

Post a Comment