ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானிடம் வீழ்ந்தது பெங்களூர் யுவராஜ் அதிரடி வீண்
பெங்களூர்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி திரில் வெற்றியை பெற்றது.
கெய்ல் ஏமாற்றம்
7-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 35-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. டாஸ் ஜெயித்த பெங்களூர் கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆனால் தொடக்கம் பெங்களூர் அணிக்கு திருப்திகரமாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி 4 ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 19 ரன்னிலும், இந்திய ஜூனியர் கேப்டன் விஜய் ஜோல் 16 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். இதனால் பெங்களூர் அணி 3 விக்கெட்டுக்கு 40 ரன்களுடன் தடுமாறியது.
யுவி ஜாலம்
இந்த இக்கட்டான சூழலில் 4-வது விக்கெட்டுக்கு யுவராஜ்சிங்கும், டிவில்லியர்சும் கைகோர்த்து பிரமாதப்படுத்தினர். ரூ.14 கோடி மதிப்புக்கு ஏற்ப ஆடாததால் நெருக்கடியில் சிக்கி தவித்த யுவராஜ்சிங், தன் மீதான விமர்சனங்களுக்கு பேட் மூலம் பதிலடி கொடுத்தார். ராஜஸ்தான் பந்து வீச்சை பின்னியெடுத்த அவர் நாலாபுறமும் சிக்சர் மழை பொழிந்தார். எந்த பவுலர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. டிவில்லியர்சும், வழக்கம் போல் ரன்வேட்டையாடி ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.
அணியின் ஸ்கோர் 172 ரன்களாக உயர்ந்த போது யுவராஜ்சிங் 83 ரன்களில் (38 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். 20 ஓவர் கிரிக்கெட்டில் யுவராஜ்சிங்கின் அதிகபட்சம் இதுவாகும். டிவில்லியர்ஸ் (58 ரன், 32 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.
20 ஓவர்களில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. கடைசி 12 ஓவர்களில் மட்டும் 120 ரன்களை திரட்டினர்.
ராஜஸ்தான் திரில் வெற்றி
பின்னர் 191 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தானுக்கு ரஹானே (24 ரன்), கருண் நாயர் (56 ரன்) நல்ல தொடக்கம் தந்த போதிலும் ஷேன் வாட்சன் (1 ரன்), ஸ்டூவர்ட் பின்னி (1 ரன்), சாம்சன் (13 ரன்) சீக்கிரம் வெளியேற்றப்பட்டனர். இவர்களில் ரஹானேவைத் தவிர மற்ற 4 பேரையும் சுழலில் மிரட்டிய யுவராஜ்சிங் காலியாக்கினார். 106 ரன்னுக்குள் 5 விக்கெட் (13.3 ஓவர்) விழுந்ததால் அந்த அணி ஊசலாடியது.
இதையடுத்து 6-வது விக்கெட்டுக்கு இணைந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவன் சுமித்தும், ஜேம்ஸ் பவுல்க்னெரும், 36 பந்துகளில் 83 ரன்கள் தேவைப்பட்ட போதிலும் அடித்து நொறுக்கி பெங்களூருக்கு அதிர்ச்சி அளித்தனர்.
ராஜஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டீவன் சுமித் 48 ரன்களுடனும் (21 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), பவுல்க்னெர் 41 ரன்களுடனும் (17 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் நின்றனர். ராஜஸ்தானுக்கு இது 6-வது வெற்றியாகும். பெங்களூருக்கு 6-வது தோல்வியாகும்.
நன்றி : தினத்தந்தி
0 comments:
Post a Comment