தமிழ்த் திரைப்பட இயக்குநர் சேரனின் "சி2எச்' சினிமா நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறுகிறது.
திரைப்படத் தயாரிப்பாளர்களின் அனுமதியுடன் டி.வி.டி.க்களாக மாற்றி வீட்டுக்கே கொண்டு செல்லும் விதத்தில் "சி2எச்' எனும் நிறுவனத்தை இயக்குநர் சேரன் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் தனது இயக்கத்தில் உருவாகியுள்ள "ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தை முதலில் வெளியிட உள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஏராளமான புதிய திரைப்படங்களை வெளியிடும் பணிகளில் இறங்கியுள்ளார். கடந்த பொங்கல் பண்டிகையன்று "ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை' படம் வெளியாக இருந்தது. ஆனால், அந்தத் தேதியில் மாற்றம் வந்தது. தற்போது இத் திட்டத்தின் அறிமுக விழா பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை இயக்குநர் சேரன் கூறியது:
"சி2எச்' எனும் இந்த முறைக்கு பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக படங்களை வெளியிட முடியாத தயாரிப்பாளர்கள் எங்களுடன் பேசி தங்களது திரைப்படங்களையும் இந்த நிறுவனத்தின் மூலம் வெளியிட ஆயத்தமாகி வருகிறார்கள்.
அதில், தரமான படங்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வந்தன.
கடந்த பொங்கல் பண்டிகையன்று இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடாக "ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை' வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, திரையரங்குகளின் மூலமாகவும் இப்படத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதனால் வெளியீட்டு தேதியை ஜனவரி 30-க்கு தள்ளி வைத்தோம். இதற்கான பணிகளில் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் தேர்வாகியுள்ள புதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இந்தத் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்புத் தருவதாக உறுதி அளித்ததுடன், திரையுலக பிரபலங்கள் பலர் ஒன்றிணைந்து இதன் தொடக்க விழாவை பெரிய அளவில் நடத்துவது என முடிவெடுத்துள்ளார்கள்.
அதன்படி, இந்நிறுவனத்தின் தொடக்க விழா பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது என்றார் இயக்குநர் சேரன்.
நன்றி - தினமணி

0 comments:
Post a Comment