Saturday, 31 January 2015

கத்தி சண்டையில் மிரட்டும் ஹன்சிகா

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் சண்டைக் காட்சிகளில் நடிப்பது மிகவும் அரிதான ஒன்று. அந்த நாயகிகளை வில்லன்களிடமிருந்து காப்பாற்றுவதுதான் நமது நாயகர்களுக்கு வேலையாக இருக்கும் போது, அதையும் நாயகிகளிடம் கொடுத்துவிட்டார் நாயகர்கள் என்ன செய்வார்கள்.

தொன்று தொட்டு இப்படிப்பட்ட காட்சிகள் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. வித்தியாசத்திற்காக ரஜினிகாந்த் நடித்த 'நாட்டுக்கு ஒரு நல்லவன்' படத்தில் நாயகியான குஷ்பு சண்டை போட, ரஜினிகாந்த் ஓரமாக நின்று கைதட்டுவது போல காட்சி ஒன்று இடம் பெற்றது. எங்கள் சூப்பர் ஸ்டார் வேடிக்கை பார்த்து கைதட்டுவதா என்று அந்தப் படத்தையே படுதோல்விப் படமாக்கிவிட்டார்கள் ரஜினிகாந்த் ரசிகர்கள்.

இப்போது காலம் மாறிவிட்டது, நாயகிகளும் சண்டைக் காட்சிகளில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ், தெலுங்கில் விரைவில் வெளிவர உள்ள, 'பாகுபலி, ருத்ரமாதேவி' ஆகிய படங்களில் அனுஷ்கா, அந்தக் காலத்தில் இருந்து சண்டைகள் அனைத்தையும் செய்கிறாராம். அதனால், மற்ற நாயகிகளுக்கும் திரைப்படங்களில் சண்டை போடும் ஆசை வந்துவிட்டது. அந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர் ஹன்சிகா.

விஜய் ஜோடியாக நடிக்கும் 'புலி' படத்திற்காக ஹன்சிகா தற்போது வாள் சண்டை பயிற்சி பெற்று வருகிறாராம். அவருக்காக வெளிநாட்டிலிருந்து பயிற்சியாளர்கள் வந்து அதைக் கற்றுத் தருகிறார்களாம். கடந்த சில வாரங்களாக ஹன்சிகா அந்தப் பயிற்சியைப் பெற்று வருகிறார். பயிற்சியின் போதே சில காயங்கள் ஏற்பட்டதாம். இருந்தாலும் திரையில் ஆவேசமாக சண்டை போட வேண்டும் என அந்த காயங்களைக் கூட ஹன்சிகா பெரிதாக நினைக்கவில்லையாம். பயிற்சி முடிந்தபின் இன்னும் சில வாரங்களில் ஹன்சிகா வாள் சண்டை போடும் காட்சிகளை இயக்குனர் சிம்புதேவன் படமாக்க உள்ளாராம்.

ஆக்ஷன் ஹீரோயின்களாக மாறுவதில், நேற்று அனுஷ்கா, இன்று ஹன்சிகா...நாளை யாரோ....!

0 comments:

Post a Comment