கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் நாயகியாக அறிமுகமாகும் 'ஷமிதாப்' படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.
அப்பா கமல்ஹாசனைப் போலவே அவருடைய மகளும் வெளிப்படையாகப் பேசுகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது நடிப்பில் எனக்கென்று எந்த வரையறையையும் நான் வைத்துக் கொள்ளவில்லை என்றார்.
“கிளாமராக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமுமில்லை. நமக்குள் ஒரு வரையறை வைத்துக் கொண்டால், நாம் நினைத்ததை அடைய முடியாது. கதாபாத்திரத்திற்குத் தேவைப்பட்டால் நான் கிளாமராக நடிப்பேன். அப்படி ஏதாவது ஒரு வரையறை வைத்துக் கொண்டால், நமக்கான வாய்ப்பை நாம் இழந்து விடுவோம்.
இதற்கு முன்னும் பல பேர் என்னை நடிக்க அழைத்தார்கள். அப்போது நான் உதவி இயக்குனராக பணி புரிந்து கொண்டிருந்தேன். நடிப்பதற்கு நான் அப்போது தயாராக இல்லை. அதனால், வந்த வாய்ப்புகளை வேண்டாமென்றேன். அவர்களும் புரிந்து கொண்டு சரி என்றனர்.
ஆனால், 'ஷமிதாப்' படத்தில் நடிக்க அழைப்பதற்கு முன்னர்தான் இனி நடிக்கலாம் என்ற முடிவெடுத்திருந்தேன். இருந்தாலும், முதல் படத்திலேயே அமிதாப்புடன் நடிக்கப் போகிறேன் என்றெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை,” என்கிறார் அக்ஷரா.

0 comments:
Post a Comment