ஒரு பரபரப்பிற்காக காவ்யா மாதவன் கர்ப்பம் என்றோ அல்லது கர்ப்பிணியானார் காவ்யா மாதவன் என்றோ இந்த செய்திக்கு தலைப்பு வைப்பது நியாயமாகாது என்றுதான் நியாயமான தலைப்பை வைத்துள்ளோம்.
மலையாள சினிமாவில் கர்ப்பிணிகளை மையப்படுத்தி கதைபின்னுவது கூட ஒரு ட்ரெண்ட்டாகத்தான் இருக்கிறது. அதேபோல பிரபல கதாநாயகிகளும் கர்ப்பிணிகளாக நடிப்பதற்கு கொஞ்சம் கூட தயக்கம் காட்டுவதில்லை என்பதுதான் இதில் ஹைலைட்...
களிமண்னு படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக ஸ்வேதா மேனன் நடித்திருந்தார். அதில் மேனனின் நிஜ பிரசவக்காட்சியை படமாக்கி, படத்தில் இணைத்து ரசிகர்களை அதிரவைத்தார்கள்.. இது கேரளாவில் மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தும் அளவுக்கெல்லாம் போனது.
அடுத்து ஐந்து கர்ப்பிணிகளையும் அவர்களுக்கு ட்ரீட்மெண்ட் அளிக்கும் ஒரு மகப்பேறு மருத்துவரையும் சுற்றி பின்னப்பட்ட 'சச்சாரியாயுடே கர்ப்பிணிகள்'படத்தில் கர்ப்பிணிகளாக ரீமா கல்லிங்கல், ஆஷா சரத், சனுஷா, கீதா, சாண்ட்ரா ஆகிய ஐந்து பேர்களும் நடித்திருந்தார்கள்.
அதேமாதிரி 'கொந்தாயும் பூணூலும்' என்ற படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்தார் பாமா. 'தேங்க்யூ' படத்தில் கூட நடிகை ஹனிரோஸ் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்திருந்தார். இந்தமுறை கர்ப்பிணியாவது காவ்யா மாதவன் டர்ன். ஆம். இப்போது 'ஆகாசவாணி' படத்திற்காக எட்டுமாத கர்ப்பிணியாகி இருக்கிறார்.
அவரது கணவராக நடிகர் விஜய்பாபு நடிக்கிறார். கணவன் மனைவிக்கு இடையே வேலைபார்ப்பது சம்பந்தமாக ஏற்படும் ஈகோ தான் கதைக்களம்.. திருவனந்தபுரத்தில் இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

0 comments:
Post a Comment