உலக அளவில் இயங்கும் GSM Association and Telecommunications Industry Association ஆகிய அமைப்புகள், ஒவ்வொரு மொபைல் போனுக்கும் அதனை அறிந்து கொள்ளும் வகையிலான தனி ஐ.எம்.இ.ஐ. எண்களை வழங்குகின்றன.
இதன் அடிப்படையில் நாம் குறிப்பிட்ட போனை வாங்கியவர், பயன்படுத்திக் கொண்டிருப்பவர் மற்றும் அவர் வசிக்கும் இடங்களை அறிய முடியும்.
இது 15 இலக்கங்களைக் கொண்ட ஓர் எண். மொபைல் போனில் அழைப்பு ஏற்படுத்துகையில், சேவையினை வழங்கும் நிறுவனத்தின் சர்வரில் இந்த எண் பதிவு செய்யப்படும்.
ஆனால், பல போலி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும் மொபைல் போன்களில், உண்மையான தனி எண்களைப் போல போலியாக அதே எண்களை அமைத்து வெளியிடுகின்றனர். இதனால், அவை பயன்படுத்தப்படும் நாட்டில், தீவிரவாதிகள் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் பெருகுகின்றன.
இதனால், இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இயக்குநர், இத்தகைய போலி எண்களைக் கொண்டுள்ள போன்களை இந்தியாவில் தடை செய்வதாக ஆணை வெளியிட்டுள்ளார்.
இவை பெரும்பாலும் கிரே மார்க்கட் என அழைக்கப்படும் வரியற்ற விற்பனை மையங்கள் வழியாகவே விற்பனை செய்யப்படுகின்றன. இந்த இடங்களில் சோதனை கடுமையாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment