'ஐ' படம் வெளிவந்த 20 நாட்களிலேயே தமிழ்த் திரைப்படங்களின் வசூலில் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இதுவரை
வெளிவந்த தமிழ்ப் படங்களில் அதிக வசூலைக் குவிக்கும் படமாக அமைந்து வருகிறது.
படத்தைப் பற்றி ஆரம்பத்தில் நெகட்டிவ்வான சில விமர்சனங்கள் வெளிவந்தாலும் விக்ரமின் அபாரமான நடிப்பாலும், ஏ.ஆர்.ரகுமானின் இனிமையான இசையாலும், பி.சி.ஸ்ரீராமின் அற்புதமான ஒளிப்பதிவாலும், ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தாலும் அந்த விமர்சனங்களையும் மீறி இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று சாதனை புரிந்து வருகிறது.
உலகம் முழுவதும் இதுவரை 205 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளியுள்ளதாகவும், பங்குத் தொகையாக மட்டும் 105 கோடி ரூபாய் வரை கிடைத்திருக்கும் என்றும் டோலிவுட் வியாபார வட்டடாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் திரையுலகின் முக்கியமான ஏரியாவாகக் கருதப்படுவது மதுரை ஏரியாதான். அந்த ஏரியாவை வைத்துத்தான் ஒரு படத்தின் வெற்றியையும் கணிப்பது வழக்கம்.
அந்த விதத்தில் 'எந்திரன்' படத்திற்காகக் கிடைத்த பங்குத் தொகையை 'ஐ' படம், இப்போதே தாண்டி விட்டதாம். இது போன்று மற்ற ஏரியாக்களிலும் 'ஐ' படத்தின் வசூல் 'எந்திரன்' படத்தின் வசூலை மிஞ்சி வருவதாகத் தகவல்கள் கிடைத்து வருகின்றன.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 75 கோடி ரூபாய் வரை வசூலும், பங்குத் தொகையாக 55 கோடி ரூபாய் வரையிலும் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் பல திரையரங்குகளில் 'ஐ' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்னும் வரும் நாட்களிலும் இந்த வசூல் தொடரும் என்பதால் தமிழ்த் திரையுலகில் அதிக வசூலைக் குவிக்கும் படமாக 'ஐ' படம் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைக்கும் என்கிறார்கள்.

0 comments:
Post a Comment